இன்றைக்கு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் இருவர். தற்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா அம்மா மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அய்யா. ஒருவரை வடக்கு என்றால் இன்னொருவரை தெற்கு எனலாம். இரண்டு பேரும் இரு துருவங்கள். ஒன்றுடன் ஒன்று சேரவே சேராது என்பது போல் அரசியல் நடத்துபவர்கள். எதிர்க்கட்சியாக மட்டுமின்றி தொண்டர்களும் அப்படியே. முன்னைக்கு தற்போது பரவாயில்லை. தொண்டர்களுக்குள்ளான அடிதடி, வெட்டுக் குத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. தொண்டர்கள் கொஞ்சம் விவரமாகிவிட்டார்கள் என எடுத்துக்கொள்ளலாம்.
1982-ல், அம்மா அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்ததிலிருந்து இவர்களுக்கிடையேயான யுத்தம் ஆரம்பமாகிறதெனக் கொள்ளலாம். எம்.ஜி.ஆாின் இறப்பிற்குப் பின் மிகவும் உக்கிரமாக யுத்தம் மூண்டுவிட்டது. 1989-ல் ஜெவா ஜாவா என உக்கிரப் போர். இரண்டு அம்மையார்களும் தங்களுக்குள் சண்டையிட்டு அய்யாவை சுலபமாக வெற்றிபெற வைத்தார்கள். 1991லிருந்து ஆரம்பமாகிறது இருவருக்குமான கால் நூற்றாண்டுக்கும் மேலான தொடர் யுத்தம். இருவரும் மாறி மாறி அாியணையில் அமர்வதும் எழுவதுமாகக் கோலோச்சுகிறாா்கள். இடையில் அாியணையில் அமர்ந்து அழகு பார்க்க எத்தனையோ தலைவர்கள், தளபதிகள், இளவரசர்கள், அரசர்கள், முதலாளிகள் முயன்றும் இருவரையும் வெற்றி காண முடியவில்லை. இடையில் இருமுறை அாியாசனத்தில் பட்டும் படாமலும், ஒட்டியும் ஒட்டாமலும் உட்கார்ந்த பெருமைக்குரியவர் ஓ. பன்னீர் செல்வம் ஆவார்.
அய்யாவும், அம்மாவும் அரசியலில் குதித்தது எதற்காக எனத் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். மக்கள் நலன், சமுதாய முன்னேற்றம், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வு, ஏழைகளுக்குப் பாடுபடுதல், உழைக்கும் மக்கள் நல்வாழ்விற்காகத் தம் உடல், பொருள், ஆவி உட்பட அனைத்தையுமே தியாகம் செய்தல் போன்ற காரணங்களன்றி பிறிதொரு காரணம் இருக்க இயலாது. அய்யாவைத் தூக்கிக் கடலிலே போட்டாலும் தமிழர்கள் பயணம் செய்து பத்திரமாகக் கரை சேர்வதற்குக் கட்டுமரமாக இருப்பார். அம்மா வாழ்வது மக்களுக்காகவே. மக்கள் சேவையே மகேசன் சேவையாக வாழ்பவர்.
Leave A Comment